Tuesday 28 November 2017

சந்தா கோச்சார் சொல்லும் வெற்றிக்கு ஏழு விதிகள்

ந்தா கோச்சார், ஆண்கள் பெருமளவில் மிக பெரிய தலைமை பொறுப்புகளை வகிக்கும் வங்கி துறையில் ஒரு தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நடத்தி வருகிறார், பல கருத்தரங்குகளில் இவர் ஆற்றிய உரைகள், கொடுத்துள்ள பேட்டிகள், தொழில் துறையில் பெண்களை, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும், முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் வகையிலும் இருக்கிறது. சில கருத்தரங்குகளில் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகளின் சிறு தொகுப்பை காணொளி காட்சியாக காணலாம். அவரது பேச்சின் தமிழாக்கம் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.       

எப்போதும் கற்று கொண்டிருங்கள்
கல்லூரியில் படித்து முடித்து பட்டம் வாங்கி வெளியில் வந்து விடுவதோடு படிப்புக்கு முற்றுபுள்ளி வைத்து விடாதீர்கள். உண்மையில் நீங்கள் வெளி உலகில் வேலைக்கு செல்லும் போது தான் நிறைய விஷயங்களை அனுபவப்பூர்வமாக கற்று கொள்வீர்கள் (புத்தக படிப்பு வேறு, அனுபவ அறிவு வேறு). வெற்றி பெறுவதற்கு வெறும் புத்தக படிப்பு மட்டும் போதாது, அனுபவ அறிவு வேண்டும். அதனால், ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதில் கற்று கொள்வதில் ஆர்வத்தோடு இருங்கள். 


கடும் உழைப்புக்கு மாற்று வேறில்லை

உழைப்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கும், கடுமையாக உழைத்தால் எந்த துறையிலும் நிச்சயமாக வெற்றி பெறலாம். உழைப்போடு கூட இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு துறையிலும் வரும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை நீங்களே தயார்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள்

ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலாவது உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்த காரியத்தை என்னால் உறுதியாக செய்து முடிக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் உங்களால் முடியும் என்று நம்பினால் தான் வெற்றி பெற முடியும், வாழ்கையில் சில துறைகளில் பெண்கள் சாதிக்க முடியாமல் போவதற்கு காரணம் இதெல்லாம் என்னால் செய்ய முடியாது என்ற நினைப்பு தான். தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள், வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். 

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, எதை நேசிக்கிறீர்களோ அதை செய்யுங்கள்

இன்றைக்கு பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர், எல்லா துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. உங்களுக்கு எந்த துறையை பிடிக்கிறதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள். பின்பு அந்த துறையில் நீங்கள் தான் வல்லுநர் என்று சொல்லும்படி அந்த துறையில் சகலதையும் கற்று கொள்ளுங்கள். எந்த ஒரு துறையில் வெற்றி பெற விரும்பினாலும் அந்த துறையில் உங்களுக்கு விருப்பம் இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி செய்யும் வேலையில் தான் வெற்றி பெற முடியும். 

உங்கள் கனவு பெரியதாக, உயர்ந்ததாக இருக்கட்டும்

வருங்காலம் குறித்த உங்களுடைய கனவு அல்லது இலக்கு மிக பெரியதாக, உயர்ந்ததாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், உங்களை சூழ்ந்து இருக்கும் தொழில் துறை வாய்ப்புகளை பற்றி எப்போதும் விழிப்போடு இருங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான துறையை தேர்ந்தெடுத்த பின் உங்கள் இலக்கை அடைவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த துவங்குங்கள். பலர் கனவு காண்பதோடு நின்று விடுகிறார்கள், சரியான திட்டமிடுதலும், திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளும் அறிந்திருந்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.

வெற்றியில் ஊழியர்களின் பங்கு

ஒரு தொழில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எந்த தொழிலிலும் சில சோதனையான நேரங்கள் வரக்கூடும். அந்த சோதனையான நேரத்தில் ஊழியர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நிர்வாகத்தோடும், வாடிக்கையாளர்களோடும் நல்ல தொடர்பில் இருந்தால், நிர்வாகம் எப்போதும் வாடிகையாளர்களை கைவிடாது என்ற நல்ல நம்பிக்கையை ஊழியர்கள் கொடுத்து வந்தால் அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய சரிவிலிருந்தும் மீண்டு வந்து விடும். 

மிக சிறந்ததை கொடுங்கள்

ஒரு வேலையை உங்களால் எவ்வளவு சிறப்பாக செய்து கொடுக்க முடியுமோ உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அவ்வளவு சிறப்பாக செய்து கொடுங்கள். அந்த வேலையை மற்றவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பின்பு அந்த வேலையை மற்றவர்களை விட உங்களால்   எப்படி   சிறப்பாக   செய்ய   முடியும்   என்று    யோசித்து    பின்னர்
அந்த வேலையை உங்கள் மனநிறைவுக்காக மட்டுமல்லாமல் வாடிக்கையாளரும் மிக சிறப்பான பணி அன்று சொல்லி வாழ்த்தும் வகையில் செய்து கொடுங்கள், அப்போது அந்த துறையில் உங்களின் வெற்றி நிச்சயம்.