Monday 6 November 2017

போராடி வென்ற பெண்: மலாலா யூசுஃப்சாய்


ப்போது எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ அல்லது துப்பாக்கி சூடு நடக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கும் தேசத்தில், பழமைவாதம் பேசும் தாலிபான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஒரு பெண்ணால் அவர்களை எதித்து போராடி வெற்றி பெற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மலாலா யூசுஃப்சாய். 

பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதே பாவம் என்று எண்ணும் பழமைவாதத்தில் ஊறிப்போன தாலிபான் தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தான் நாட்டில், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மிங்கோரா என்ற சிற்றூரில் 1997ஆம் ஆண்டு பிறந்த மலாலா யூசுஃப்சாய்க்கு சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. அவரது குடும்பமும் அவர் படிப்புக்கு தடை விதிக்கவில்லை. 2004ஆம் ஆண்டு வரை, எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் தாலிபான் தீவிரவாதிகள் இவர்கள் வாழ்ந்த பகுதியை ஆக்கிரமித்த பின் நிலைமை தலைகீழானது, மக்கள் கல்வி அறிவு பெற்று விட்டால் பழமைவாத கொள்கைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் என்பதால் தாலிபான்கள் பல பள்ளிகள் கல்லூரிகளை குண்டு வைத்து தகர்த்தனர். இவர்களை எதிர்க்கும் ஆண்கள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர், பெண்கள் சவுக்கடி கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டனர், கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள் போன்றவை தினசரி வாழ்க்கை முறையாக மாறி போனது.  அவர் வாழ்ந்து வந்த சமூகத்தை கட்டுப்படுத்த தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகளுக்கு பெண்கள் பள்ளி சென்று கல்வி கற்பது கண்களை உறுத்தி கொண்டே இருந்துள்ளது. தாலிபான் தீவிரவாதிகளின் தடையை மீறி மலாலா பள்ளிக்கு சென்றார். 
   
2009ஆம் ஆண்டு மலாலா பிபிசி வலைபக்கத்தில் தனது ஊரில் வசிக்கும் மக்கள் தாலிபான் தீவிரவாதிகளால் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து எழுதிய வலைபதிவு உலக மக்களின் கவனத்தை இவர் ஊரின் பக்கம் திருப்பியது, ஆனாலும் அந்த வலைப்பதிவை இவர் புனைப்பெயரில் எழுதியதால் இவர் யார் என்று உலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது. பின்பு ஒரு தொலைக்காட்சிக்கு இவர் அளித்த நேரலை பேட்டி மூலம் இவரின் பெயரும், முகமும் உலகுக்கு அறிமுகமானது, அது முதல் தாலிபான் குழுக்களின் கோபத்திற்கு இலக்கானார். 



2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி, மலாலா படித்த பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து மயங்கி சரிந்தார், மலாலா சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவ தொடங்கியது, மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மலாலாவுக்கு தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்ட சரியான மருத்துவ சிகிச்சையாலும், உலக மக்களின் வேண்டுதல்களாலும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தார். இந்த சம்பவத்திற்கு பின்பு, பெண் கல்வியின் முக்கித்துவம் குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இன்னும் அதிகமாக எழுதவும், மேடைகளில் பேசவும் துவங்கினார். 



2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹாவர்ட் பல்கலைகழகம் வழங்கிய மனித உரிமைக்கான விருதும், 2014ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை சிறார் உரிமைக்காக பாடுபட்ட இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியோடு இணைந்து பெற்றார். எண்ணற்ற விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் மலாலாவுக்கு குவிய துவங்கினாலும், இன்னொரு புறம் "மீண்டும் உயிரோடு திரும்பி வந்தால் கொன்று போடுவோம்" என்று தாலிபான்கள் இவரது உயிருக்கு உலை வைக்க காத்திருக்கின்றனர். 



இவரை கொல்ல துடிக்கும் தீவிரவாதிகள் குறித்து மலாலாவிடம் கேட்டால் அவர் கூறும் பதில் தீவிரவாதிகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் உள்ளது: இப்பொழுதும் என்னால் அந்த சம்பவத்தை தெளிவாக நினைவுகூர முடிகிறது, அவர்கள் என்னை கொல்ல வந்தாலும், அவர்களிடம் நான்  "அவர்கள் செய்வது தவறு என்று சொல்லி, பெண்கள் கல்வி கற்பது எங்களின் அடிப்படை உரிமை என்று வலியுறுத்தவே விரும்புகிறேன்" என்கிறார் மலாலா யூசுஃப்சாய்.

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்