Tuesday 13 March 2018

தோல்விகளால் தோற்கடிக்க முடியாத பெண்


விமான பணிப்பெண் வேலைக்கு 
24 முறை விடாமுயற்சி 
அதில் 22 தோல்விகள் இறுதியில்... 

விமான பணிப்பெண் ஆக வேண்டும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்து ரசித்த நாடுகளை விமானத்தில் பறந்து சென்று நேரில் பார்க்க வேண்டும் - இது தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரி க்லேரின் என்ற இளம் பெண்ணின் கனவு, பதினெட்டு வயதில் கல்லூரி படிப்பு முடிந்து பட்டம் பெற்றவுடன் தனது கனவை நனவாக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வரும் மிக பிரபலமான சர்வதேச விமான நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்றிருக்கிறார், ஆண்டு முதல் கட்ட தேர்விலேயே அவர் வெளியேற்றப்பட்டார். 



முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைப்பது அரிது தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் நடத்திய தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கலந்து கொண்டுள்ளார், ஆனால் வேலை  தான் கிடைக்கவில்லை. பல இடங்களில் முதல்  கட்ட தேர்விலேயே மேரி க்லேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார், ஒவ்வொரு முறை விமான நிறுவனங்களில் தேர்வுக்கு செல்லும்போதும் விமான பணிப்பெண் வேலை எப்படியும் தனக்கு கிடைத்து விடும் என்று மிகவும் நம்பிக்கையோடு செல்வார் மேரி க்லேர். சில முறை தொடர் தோல்விகளுக்கு பிறகு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே தன விமான பணிப்பெண் வேலைக்கான முயற்சிகளை தொடர்ந்து செய்யலாம் என்று நினைத்த மேரி க்லேருக்கு விமான நிறுவனமல்லாத வேறு ஒரு  புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைக்க அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே விமான நிறுவனங்களில் பணிப்பெண்      வேலைக்கு      தொடர்ந்து        விண்ணப்பங்கள்       அனுப்பி 
தேர்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார். 



தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல் சில காலம் (மூன்று ஆண்டுகள்) தேர்வுகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டு விமான பணிப்பெண் வேலைக்கு தன்னை தகுதிபடுத்தி கொள்ள ஒரு பயற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சியும் பெற்றார். 21 வயதில் மீண்டும் விமான பணிப்பெண் வேலைக்கான தேடுதல் வேட்டையை துவங்கினார்.  ஒரு விமான நிறுவனம் நடத்திய தேர்வில் அவர் உடல் எடை அதிகம் என்று கூறி நிராகரித்துள்ளனர், அப்போது அவரது உடல் எடை 54 கிலோ தான் இருந்துள்ளது. இவர் இப்படி தொடர்ந்து விமான பணிப்பெண் வேலைக்கு முயற்சித்து தோல்வி அடைவதை பார்த்த சிலர் இவருக்கு  விமான பணிப்பெண் வேலைக்கு ஏற்ற அழகும் இல்லை, உயரமும் இல்லை என்று இவர் காதுபடவே பேசி கிண்டல் செய்துள்ளனர். தேர்வுகளுக்கு சென்று தோல்வி அடைவது வீட்டிற்க்கு தெரிந்தால் பெற்றோர் கவலைப்படுவார்கள் என்று அவர்களுக்கு சொல்லாமல் தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஒரு வேளை தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைத்து விட்டால் அந்த வெற்றி செய்தியை மகிழ்ச்சியுடன் வீட்டில் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.  




ஒரு கட்டத்தில் சிலர் சொல்வது போல் தான் விமான பணிப்பெண் வேலைக்கு தகுதியானவள் இல்லையோ என்ற எண்ணம் கூட மேரி க்லேருக்கு வந்துள்ளது, ஆனால் விடாமுயற்சி வெற்றி தரும் என்று தன்னை தானே தேற்றி கொண்டு தொடர்ந்து வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகள் கடந்து விட்டது, இதுவரை விமான நிறுவனங்களில் பணிப்பெண் வேலைக்கு சேர முயன்றதில் 23 முறை தொடர் தோல்வி தான் பரிசாக கிடைத்துள்ளது, 2016ஆம் ஆண்டு, 24வது முறை, புகழ்பெற்ற சர்வதேச விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் நடந்த இறுதி கட்ட நேர்முக தேர்வில் மேரி க்லேர் விமான பணிப்பெண் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார், இருபது பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் மேரி க்லேரும் ஒருவர். 

விடாமுயற்சியாலும், கடும் பயிற்சிகளாலும் தொடர் தோல்விகளை கண்டு தளராமல் தன வாழ்நாள் இலட்சியத்தை அடைந்துள்ள மேரி க்லேர் சொல்வது இதுதான்: தொடர் தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முயற்சியில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் தான் நம்மை கீழே தள்ளி விடும், ஆகவே, தோல்வி அடைவது குறித்து பயப்படாதீர்கள். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சரியான ஒரு  காரணம் வைத்திருப்பார். பல முறை நான் அடைந்த தோல்விகள் தான் என்னை தொடர் பயற்சிகள் மூலம் சிறந்த விமான பணிப்பெண்ணாக தகுதியடைய செய்து ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்ற வைத்துள்ளது....  
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------