திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண் ரூபா தேவி, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிபா கால்பந்து போட்டிகளின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து பிபா கால்பந்து போட்டிக்கு நடுவராக தேர்வு பெற்று கலந்து கொண்ட ஐந்தாவது பெண் ரூபா தேவி (தமிழகத்திலிருந்து முதல் பிபா நடுவர்).
வேதியியல் துறையிலும், விளையாட்டு துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள ரூபா தேவி தன் தாயையும், தந்தையையும் இழந்த பின்பு மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தன் வாழ்கையை நடத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு கால்பந்து நடுவராவதற்கு பயிற்சி அளிக்கும் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற இவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் பிபா சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.
சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்ற ரூபா தேவி கால்பந்து விளையாட்டை தான் மிகவும் விரும்பி விளையாடுவதாகவும், கால்பந்து விளையாடுவது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும், கால்பந்து விளையாட்டில் தான் கொண்டிருந்த தணியாத ஆர்வமும், தொடர் பயிற்சியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளதாகவும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வறுமைக்கு நடுவில் கடுமையாக உழைத்து போராடி தன் வாழ்க்கையையும் பார்த்து கொண்டு, கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்தி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரூபா தேவியின் சாதனை கால்பந்து விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த இன்னும் பல பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாதனைகள் பல புரிந்திட ஊக்கம் அளிக்கும் என்று நம்பலாம்.