ஸ்பெஷல் ப்ளம் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
முட்டை - 5 எண்ணிக்கை
சோள மாவு - 10 கிராம்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 250 கிராம்
ரம் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
சாக்லேட் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை
உலர் பழங்கள், பருப்புகள் ஒவ்வொன்றும் 50 கிராம்:
பேரிச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, உலர் கருந்திராட்சை, முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரி பழம், ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை, - இவைகளில் ஒரு பாதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும், மறு பாதியை மிக்சியில் அடித்து வைத்து கொள்ளவும்.
கேரமல் சிரப்: நான்கு ஸ்பூன் சர்க்கரையை தவாவில் போட்டு தண்ணீர் விடாமல் சூடாக்கவும், சர்க்கரை உருகி அடர்த்தியான தேன் நிறத்துக்கு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு உடனே சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கி கொள்ளவும், கேரமல் சிரப் தயார்.
மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து சலித்து எடுத்து கொண்டு அதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உலர் பழங்கள், பருப்புகளை சேர்த்து கலக்கி தனியே எடுத்து வைக்கவும். ஓரு பாத்திரத்தில் 1/4 கிலோ வெண்ணையை எடுத்து கொண்டு அதை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு கலக்கி கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்னர் வெண்ணெய் சர்க்கரை கலவையில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ரம் எசன்சம், சாக்லேட் எசன்சம் ஒவ்வொரு மூடி ஊற்றி கலக்கவும். பின்னர் பொடியாக அரைக்கப்பட்ட உலர் பழங்கள், பருப்புகள் ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதில் ஏற்கெனவே செய்து வைத்த கேரமல் சிரப் மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி கொள்ளவும். இந்த கலவையில் சலித்து வைத்த மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ளவும். கேக் தயாரிக்க தேவையான மாவு தயார்.
அடிபாகம் சமமாய் இருக்க கூடிய ஒரு அலுமினிய பாத்திரத்தில் வெண்ணையை தடவி அதன் மேல் ஒரு ஸ்பூன் மைதாவை தூவி கோட்டிங் கொடுத்து, இந்த பாத்திரத்தில் கேக் மாவை கொட்டி எடுத்து கொள்ளவும். காஸ் அடுப்பின் மேல் ஒரு சிறு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தவாவை வைத்து, அடுப்பை பற்ற வைத்து தவா நன்கு சூடானவுடன், அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு, தவாவின் மேல் கேக் மாவு இருக்கும் அலுமினிய பாத்திரத்தை ஒரு சிறு துளையுள்ள மூடியை வைத்து மூடி விடவும், 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வேக விடவும், நன்கு வெந்தவுடன் கேக் வாசனை வரும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால் ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். சில நிமிடங்கள் ஆறவிட்டு கேக் பாத்திர ஓரங்களில் ஒட்டியிருந்தால் அதை கத்தி கொண்டு பிரித்து விட்டு கேக்கை ஒரு தட்டில் எடுத்து துண்டுகள் போடவும். ஸ்பெஷல் ப்ளம் கேக் தயார்.
ஓவன் இல்லாமல் குக்கரில் சாக்லேட் ஃபில்லிங் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு 1 கப்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 1/2 கப்
செய்முறை:
மைதா மாவு, பேக்கிங் பவுடர், தூள் உப்பு மூன்றையும் சேர்த்து சலித்து தனியே எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயுடன் பொடியாக்கப்பட்ட சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்பு முட்டை, வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ஏற்கெனவே சலித்து வைத்திருக்கும் மைதா மாவு கலவையை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி விடவும். பின்னர் அதில் மைதா மாவு கலவையை ஊற்றவும், பிரஷர் குக்கர் அடி பாத்திரத்தில் மண் அல்லது உப்பை பரப்பி அதன் மேல் ஒரு மூடிஅல்லது தட்டு போட்டு அதன் மேல் மைதா மாவு கலவை பாத்திரத்தை வைத்து குக்கரை வெயிட் போடாமல் மூடி போட்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஹை ப்ளேமிலும், அடுத்த முப்பது முதல் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நேரம் (சிம்) லேசான சூட்டிலும் வைக்கவும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால் ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். தயாரான கேக் ஆறிய பிறகு இரண்டாக வெட்டி அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி, அதன் மேல் வெட்டப்பட்ட இன்னொரு கேக் துண்டை வைத்து அதன் மேலும் சாக்லேட் சிரப் ஊற்றினால் சாக்லேட் ஃபில்லிங் கேக் தயார்.