Tuesday 26 December 2017

வறுமைக்கு நடுவில் சாதனை : சர்வதேச கால்பந்து போட்டி நடுவரான ரூபா தேவி




திண்டுக்கல்    மாவட்டத்தை   சேர்ந்த    24 வயது பெண்    ரூபா தேவி,    கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற   சர்வதேச அளவில்   புகழ்பெற்ற பிபா கால்பந்து போட்டிகளின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இந்தியாவிலிருந்து    பிபா கால்பந்து  போட்டிக்கு நடுவராக   தேர்வு பெற்று   கலந்து கொண்ட    ஐந்தாவது பெண் ரூபா தேவி (தமிழகத்திலிருந்து முதல் பிபா நடுவர்). 

வேதியியல் துறையிலும், விளையாட்டு துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள ரூபா தேவி தன் தாயையும், தந்தையையும் இழந்த பின்பு மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தன் வாழ்கையை நடத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு கால்பந்து நடுவராவதற்கு பயிற்சி அளிக்கும் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற இவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் பிபா சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டார். 



சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்ற ரூபா தேவி கால்பந்து விளையாட்டை தான் மிகவும் விரும்பி விளையாடுவதாகவும், கால்பந்து விளையாடுவது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும், கால்பந்து விளையாட்டில் தான் கொண்டிருந்த தணியாத ஆர்வமும், தொடர் பயிற்சியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளதாகவும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


வறுமைக்கு நடுவில் கடுமையாக உழைத்து போராடி தன் வாழ்க்கையையும் பார்த்து கொண்டு, கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்தி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரூபா தேவியின் சாதனை கால்பந்து விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த இன்னும் பல பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாதனைகள் பல புரிந்திட ஊக்கம் அளிக்கும் என்று நம்பலாம். 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 18 December 2017

வீட்டிலேயே கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ளம் கேக் & சாக்லேட் ஃபில்லிங் கேக் ( ஓவன் இல்லாமல் )

ஸ்பெஷல் ப்ளம் கேக்



தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
முட்டை - 5 எண்ணிக்கை
சோள மாவு - 10 கிராம்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 250 கிராம்
ரம் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
சாக்லேட் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை

உலர் பழங்கள், பருப்புகள் ஒவ்வொன்றும் 50 கிராம்:
பேரிச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, உலர் கருந்திராட்சை, முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரி பழம், ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை, - இவைகளில் ஒரு பாதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும், மறு பாதியை மிக்சியில் அடித்து வைத்து கொள்ளவும்.    

கேரமல் சிரப்: நான்கு ஸ்பூன் சர்க்கரையை தவாவில் போட்டு தண்ணீர் விடாமல் சூடாக்கவும், சர்க்கரை உருகி அடர்த்தியான தேன் நிறத்துக்கு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு உடனே சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கி கொள்ளவும், கேரமல் சிரப் தயார். 

மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து சலித்து எடுத்து கொண்டு அதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உலர் பழங்கள், பருப்புகளை சேர்த்து கலக்கி தனியே எடுத்து வைக்கவும். ஓரு பாத்திரத்தில் 1/4 கிலோ வெண்ணையை எடுத்து கொண்டு அதை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு கலக்கி கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்னர் வெண்ணெய் சர்க்கரை கலவையில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ரம் எசன்சம், சாக்லேட் எசன்சம் ஒவ்வொரு மூடி ஊற்றி கலக்கவும்.  பின்னர் பொடியாக அரைக்கப்பட்ட உலர் பழங்கள், பருப்புகள் ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதில் ஏற்கெனவே செய்து வைத்த கேரமல் சிரப் மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி கொள்ளவும். இந்த கலவையில் சலித்து வைத்த மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ளவும். கேக் தயாரிக்க தேவையான மாவு தயார். 

அடிபாகம் சமமாய் இருக்க கூடிய ஒரு அலுமினிய பாத்திரத்தில் வெண்ணையை தடவி அதன் மேல் ஒரு ஸ்பூன் மைதாவை தூவி கோட்டிங் கொடுத்து, இந்த பாத்திரத்தில் கேக் மாவை கொட்டி எடுத்து கொள்ளவும். காஸ் அடுப்பின் மேல் ஒரு சிறு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தவாவை வைத்து, அடுப்பை பற்ற வைத்து தவா நன்கு சூடானவுடன், அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு, தவாவின் மேல் கேக் மாவு இருக்கும் அலுமினிய பாத்திரத்தை ஒரு சிறு துளையுள்ள மூடியை வைத்து மூடி விடவும், 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வேக விடவும், நன்கு வெந்தவுடன் கேக் வாசனை வரும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால்  ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். சில நிமிடங்கள் ஆறவிட்டு கேக் பாத்திர ஓரங்களில் ஒட்டியிருந்தால் அதை கத்தி கொண்டு பிரித்து விட்டு கேக்கை ஒரு தட்டில் எடுத்து துண்டுகள் போடவும்.   ஸ்பெஷல் ப்ளம் கேக் தயார்.  



ஓவன் இல்லாமல் குக்கரில் சாக்லேட் ஃபில்லிங் கேக்

தேவையான பொருட்கள்:
மைதா மாவு 1 கப்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 1/2 கப்



செய்முறை: 
மைதா மாவு, பேக்கிங் பவுடர், தூள் உப்பு மூன்றையும் சேர்த்து சலித்து தனியே எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயுடன் பொடியாக்கப்பட்ட சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்பு முட்டை, வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ஏற்கெனவே சலித்து     வைத்திருக்கும்    மைதா மாவு    கலவையை     சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி விடவும். பின்னர் அதில் மைதா மாவு கலவையை ஊற்றவும், பிரஷர் குக்கர் அடி பாத்திரத்தில் மண் அல்லது உப்பை பரப்பி அதன் மேல் ஒரு மூடிஅல்லது தட்டு போட்டு அதன் மேல் மைதா மாவு கலவை பாத்திரத்தை வைத்து குக்கரை வெயிட் போடாமல் மூடி போட்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஹை ப்ளேமிலும், அடுத்த முப்பது முதல் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நேரம் (சிம்) லேசான சூட்டிலும் வைக்கவும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால்  ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.  தயாரான கேக் ஆறிய பிறகு இரண்டாக வெட்டி அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி, அதன் மேல் வெட்டப்பட்ட இன்னொரு கேக் துண்டை வைத்து அதன் மேலும் சாக்லேட் சிரப் ஊற்றினால் சாக்லேட் ஃபில்லிங் கேக் தயார். 

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 11 December 2017

செய்து பாருங்கள்: அழகிய லேடீஸ் பர்ஸ்



தேவையான பொருட்கள்:
உங்களுக்கு பிடித்த நிறத்தில் பளபளப்பான துணி
பழைய நோட்டு புத்தகங்களில் உள்ள பைண்டு அட்டை
பர்ஸ் ஓரத்தில் ஓட்டுவதற்கு அழகிய வேலைப்பாடு கொண்ட தங்க நிற  ஜரிகை பட்டை (பேன்சி கடைகளில் கிடைக்கும்) 
அழகிய கல் பதித்த டாலர் ஒன்று
பர்சை மூட இரண்டு ஸ்ட்ராப்கள்  
கத்திரிக்கோல்
ஓட்டுவதற்கு பெவிகால் அல்லது க்ளூ

செய்முறை:
* நோட்டு அட்டையை காணொளி காட்சியில் காண்பிக்கப்பட்டிருக்கும் அளவுகளில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 
* வெட்டப்பட்ட அட்டைகளை துணியின் மேல் வைத்து அளவை சரி பார்த்த பின்பு பெவிகால் அல்லது குளூ கொண்டு துணியில் ஒட்டி கொள்ளவும்.
* அட்டை ஒட்டிய துணியின் ஓரங்களில் அழகிய ஜரிகை பட்டையை ஒட்டி கொள்ளவும் 
* துணி ஒட்டப்பட்ட அட்டையை காணொளி காட்சியில் காண்பிக்கப்பட்டிருப்பது போல் மடித்து கொள்ளவும்
* மடிக்கப்பட்ட அட்டையின் இருபுறமும் காணப்படும் இடைவெளியை சிறு துணி துண்டுகள் கொண்டு ஒட்டி மூடவும்
* பர்சை அழுத்தமாக மூடுவதற்கு ஸ்ட்ராப்களை க்ளூ கொண்டு பர்சின் முக்கோண பகுதியின் உட்புறத்திலும், செவ்வக பகுதியின் வெளிபுறத்திலும் ஒட்டி கொள்ளவும்     
* பர்ஸ் மூட பயன்படும் முக்கோண மேல் அட்டையின் மேல் அழகிய கல் பதித்த டாலரை ஒட்டவும்
* அழகிய கண்ணை கவரும் பர்ஸ் தயார். 

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 4 December 2017

ஒரே வாரத்தில் அடர்த்தியான கூந்தலுக்கு


தேவையான பொருட்கள்:

3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்
1 இ வைட்டமின்  காப்சூல்

செய்முறை:

ஒரே வாரத்தில் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளருவதற்கும் இந்த எண்ணெய் குளியல் உதவுகிறது. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும், சோற்று கற்றாழை ஜெல் கடையில் வாங்கி கொள்ளலாம் அல்லது தோட்டத்தில் உள்ள சோற்று கற்றாழையை பறித்து நீங்களே சோற்று கற்றாழை ஜெல் தயாரித்து கொள்ளலாம். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்லை நன்கு ஸ்பூனால் அடித்து கலக்கவும். இதனுடன் 1 இ வைட்டமின்  காப்சூல் சேர்க்கவும். (இ வைட்டமின் கேப்சூல் மருந்து கடைகளில் பத்து கேப்சூல்கள் கொண்ட ஒரு பட்டை இருபது முதல் முப்பது ரூபாயில் கிடைக்கும்)

இந்த எண்ணெய் கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து விடவும். அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தூள் தேய்த்து குளிக்கவும். இந்த எண்ணெய் குளியலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் முடி கொட்டுவது நிற்பதுடன் கூந்தல் அடர்த்தியாகவும் வளர தொடங்கும். 


----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்