Tuesday 28 November 2017

சந்தா கோச்சார் சொல்லும் வெற்றிக்கு ஏழு விதிகள்

ந்தா கோச்சார், ஆண்கள் பெருமளவில் மிக பெரிய தலைமை பொறுப்புகளை வகிக்கும் வங்கி துறையில் ஒரு தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நடத்தி வருகிறார், பல கருத்தரங்குகளில் இவர் ஆற்றிய உரைகள், கொடுத்துள்ள பேட்டிகள், தொழில் துறையில் பெண்களை, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும், முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் வகையிலும் இருக்கிறது. சில கருத்தரங்குகளில் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகளின் சிறு தொகுப்பை காணொளி காட்சியாக காணலாம். அவரது பேச்சின் தமிழாக்கம் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.       

எப்போதும் கற்று கொண்டிருங்கள்
கல்லூரியில் படித்து முடித்து பட்டம் வாங்கி வெளியில் வந்து விடுவதோடு படிப்புக்கு முற்றுபுள்ளி வைத்து விடாதீர்கள். உண்மையில் நீங்கள் வெளி உலகில் வேலைக்கு செல்லும் போது தான் நிறைய விஷயங்களை அனுபவப்பூர்வமாக கற்று கொள்வீர்கள் (புத்தக படிப்பு வேறு, அனுபவ அறிவு வேறு). வெற்றி பெறுவதற்கு வெறும் புத்தக படிப்பு மட்டும் போதாது, அனுபவ அறிவு வேண்டும். அதனால், ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதில் கற்று கொள்வதில் ஆர்வத்தோடு இருங்கள். 


கடும் உழைப்புக்கு மாற்று வேறில்லை

உழைப்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கும், கடுமையாக உழைத்தால் எந்த துறையிலும் நிச்சயமாக வெற்றி பெறலாம். உழைப்போடு கூட இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு துறையிலும் வரும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை நீங்களே தயார்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள்

ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலாவது உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்த காரியத்தை என்னால் உறுதியாக செய்து முடிக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் உங்களால் முடியும் என்று நம்பினால் தான் வெற்றி பெற முடியும், வாழ்கையில் சில துறைகளில் பெண்கள் சாதிக்க முடியாமல் போவதற்கு காரணம் இதெல்லாம் என்னால் செய்ய முடியாது என்ற நினைப்பு தான். தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள், வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். 

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, எதை நேசிக்கிறீர்களோ அதை செய்யுங்கள்

இன்றைக்கு பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர், எல்லா துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. உங்களுக்கு எந்த துறையை பிடிக்கிறதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள். பின்பு அந்த துறையில் நீங்கள் தான் வல்லுநர் என்று சொல்லும்படி அந்த துறையில் சகலதையும் கற்று கொள்ளுங்கள். எந்த ஒரு துறையில் வெற்றி பெற விரும்பினாலும் அந்த துறையில் உங்களுக்கு விருப்பம் இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி செய்யும் வேலையில் தான் வெற்றி பெற முடியும். 

உங்கள் கனவு பெரியதாக, உயர்ந்ததாக இருக்கட்டும்

வருங்காலம் குறித்த உங்களுடைய கனவு அல்லது இலக்கு மிக பெரியதாக, உயர்ந்ததாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், உங்களை சூழ்ந்து இருக்கும் தொழில் துறை வாய்ப்புகளை பற்றி எப்போதும் விழிப்போடு இருங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான துறையை தேர்ந்தெடுத்த பின் உங்கள் இலக்கை அடைவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த துவங்குங்கள். பலர் கனவு காண்பதோடு நின்று விடுகிறார்கள், சரியான திட்டமிடுதலும், திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளும் அறிந்திருந்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.

வெற்றியில் ஊழியர்களின் பங்கு

ஒரு தொழில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எந்த தொழிலிலும் சில சோதனையான நேரங்கள் வரக்கூடும். அந்த சோதனையான நேரத்தில் ஊழியர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நிர்வாகத்தோடும், வாடிக்கையாளர்களோடும் நல்ல தொடர்பில் இருந்தால், நிர்வாகம் எப்போதும் வாடிகையாளர்களை கைவிடாது என்ற நல்ல நம்பிக்கையை ஊழியர்கள் கொடுத்து வந்தால் அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய சரிவிலிருந்தும் மீண்டு வந்து விடும். 

மிக சிறந்ததை கொடுங்கள்

ஒரு வேலையை உங்களால் எவ்வளவு சிறப்பாக செய்து கொடுக்க முடியுமோ உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அவ்வளவு சிறப்பாக செய்து கொடுங்கள். அந்த வேலையை மற்றவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பின்பு அந்த வேலையை மற்றவர்களை விட உங்களால்   எப்படி   சிறப்பாக   செய்ய   முடியும்   என்று    யோசித்து    பின்னர்
அந்த வேலையை உங்கள் மனநிறைவுக்காக மட்டுமல்லாமல் வாடிக்கையாளரும் மிக சிறப்பான பணி அன்று சொல்லி வாழ்த்தும் வகையில் செய்து கொடுங்கள், அப்போது அந்த துறையில் உங்களின் வெற்றி நிச்சயம்.   

Monday 20 November 2017

17 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்திய பெண்ணுக்கு உலக அழகி பட்டம்

டந்த நவம்பர் 18 ஆம் தேதி சீனாவின் சான்யா சிட்டியில், 118 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டு போட்டியிட்ட உலக அழகி போட்டியில் எல்லோரையும் புறந்தள்ளி உலக அழகி பட்டம் வென்றுள்ளார் இந்தியவை சேர்ந்த மானுஷி சில்லார்.



20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். செயின்ட் தாமஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார்.  இவரது தாயார், நீலம் சில்லாரும் மருத்துவ படிப்பு படித்து தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை, மித்ர பாசு சில்லார், டிஆர்டிஓ - வில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.



மானுஷி சில்லார் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்துள்ளார்,  இதற்கு முன்பு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றுள்ளார், இந்த வெற்றியே இவருக்கு உலக அழகி போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும், நம்பிக்கையையும் தந்தது.



வெறும் உடல் அழகை மட்டும் வைத்து உலக அழகி பட்டம் கொடுக்கப்படுவதில்லை . இறுதி சுற்றில் போட்டில்யில் கலந்து கொள்ளும் அழகிகளின் அறிவுத்திறனும் சோதிக்கப்படும். இறுதி சுற்றில் ஐந்து நாடுகளின் அழகிகள் களத்தில் இருந்த நிலையில் மானுஷி சில்லாரிடம் போட்டி நடுவர்களால் ஒரு கேள்வி கேட்டனர் . "உலகத்திலேயே அதிக சம்பளம் பெறக் கூடிய வேலை எது? ஏன்?” என்று விளக்கம் தர சொல்லியுள்ளனர்.  

இந்த கேள்விக்கு மானுஷி அளித்த பதில் தான் உலக அழகி பட்டத்தை அவருக்கு வென்று தந்துள்ளது.  "உலகத்திலேயே மிக உயர்வான வேலை அம்மாவாக இருப்பதுதான். தாயாக இருப்பது தான் மிக உயர்ந்த பதவி. தாய்க்கு தான் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை நாம் பணமாக கொடுப்பது அல்ல. அன்பும் மரியாதையுமாக அது கொடுக்கப்படவேண்டும். அப்படித்தான் கொடுத்து கொண்டிருக்கிறோம். எனக்கு என் அம்மா தான் எப்போதும் ஊக்கம் அளிக்கக் கூடியவர், ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளைகளுக்காக வாழ்கையில் எவ்வளவோ விஷயங்களை விட்டு கொடுக்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

இவரது தாயை, தாய்மையை போற்றும் இந்த பதில் போட்டி அரங்கில் இருந்த நடுவர்களை நெகிழ செய்து விட்டது. மானுஷி சில்லாருக்கு உலக அழகி பட்டமும் வென்று தந்து விட்டது. இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு  ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றார், அதன் பின்னர் பிரியங்கா சோப்ரா 2௦௦௦ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆறு முறை இந்தியாவை சேர்த்தவர்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.



இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி "வாழ்த்துக்கள் உங்கள் வெற்றியால் இந்தியா பெருமைபடுகிறது" என்று வாழ்த்தியுள்ளார்.


இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட ஹரியானா முதல்வர் விபுல் கோயல் "உங்கள் வெற்றி உலகமெங்கும் வாழும் ஹரியானா மாநில பெண்களை பெருமைப்பட வைத்ததுள்ளது,  உலக அழகி பட்டம் வெல்லும் ஆறாவது இந்தியரான மானுஷி சில்லாருக்கு வாழ்த்துக்கள், உங்களால் நாங்கள் மிகவும் பெருமை அடைந்துள்ளோம்" என்று ட்வீட் செய்துள்ளார். 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 6 November 2017

போராடி வென்ற பெண்: மலாலா யூசுஃப்சாய்


ப்போது எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ அல்லது துப்பாக்கி சூடு நடக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கும் தேசத்தில், பழமைவாதம் பேசும் தாலிபான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஒரு பெண்ணால் அவர்களை எதித்து போராடி வெற்றி பெற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மலாலா யூசுஃப்சாய். 

பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதே பாவம் என்று எண்ணும் பழமைவாதத்தில் ஊறிப்போன தாலிபான் தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தான் நாட்டில், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மிங்கோரா என்ற சிற்றூரில் 1997ஆம் ஆண்டு பிறந்த மலாலா யூசுஃப்சாய்க்கு சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. அவரது குடும்பமும் அவர் படிப்புக்கு தடை விதிக்கவில்லை. 2004ஆம் ஆண்டு வரை, எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் தாலிபான் தீவிரவாதிகள் இவர்கள் வாழ்ந்த பகுதியை ஆக்கிரமித்த பின் நிலைமை தலைகீழானது, மக்கள் கல்வி அறிவு பெற்று விட்டால் பழமைவாத கொள்கைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் என்பதால் தாலிபான்கள் பல பள்ளிகள் கல்லூரிகளை குண்டு வைத்து தகர்த்தனர். இவர்களை எதிர்க்கும் ஆண்கள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர், பெண்கள் சவுக்கடி கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டனர், கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள் போன்றவை தினசரி வாழ்க்கை முறையாக மாறி போனது.  அவர் வாழ்ந்து வந்த சமூகத்தை கட்டுப்படுத்த தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகளுக்கு பெண்கள் பள்ளி சென்று கல்வி கற்பது கண்களை உறுத்தி கொண்டே இருந்துள்ளது. தாலிபான் தீவிரவாதிகளின் தடையை மீறி மலாலா பள்ளிக்கு சென்றார். 
   
2009ஆம் ஆண்டு மலாலா பிபிசி வலைபக்கத்தில் தனது ஊரில் வசிக்கும் மக்கள் தாலிபான் தீவிரவாதிகளால் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து எழுதிய வலைபதிவு உலக மக்களின் கவனத்தை இவர் ஊரின் பக்கம் திருப்பியது, ஆனாலும் அந்த வலைப்பதிவை இவர் புனைப்பெயரில் எழுதியதால் இவர் யார் என்று உலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது. பின்பு ஒரு தொலைக்காட்சிக்கு இவர் அளித்த நேரலை பேட்டி மூலம் இவரின் பெயரும், முகமும் உலகுக்கு அறிமுகமானது, அது முதல் தாலிபான் குழுக்களின் கோபத்திற்கு இலக்கானார். 



2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி, மலாலா படித்த பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து மயங்கி சரிந்தார், மலாலா சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவ தொடங்கியது, மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மலாலாவுக்கு தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்ட சரியான மருத்துவ சிகிச்சையாலும், உலக மக்களின் வேண்டுதல்களாலும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தார். இந்த சம்பவத்திற்கு பின்பு, பெண் கல்வியின் முக்கித்துவம் குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இன்னும் அதிகமாக எழுதவும், மேடைகளில் பேசவும் துவங்கினார். 



2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹாவர்ட் பல்கலைகழகம் வழங்கிய மனித உரிமைக்கான விருதும், 2014ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை சிறார் உரிமைக்காக பாடுபட்ட இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியோடு இணைந்து பெற்றார். எண்ணற்ற விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் மலாலாவுக்கு குவிய துவங்கினாலும், இன்னொரு புறம் "மீண்டும் உயிரோடு திரும்பி வந்தால் கொன்று போடுவோம்" என்று தாலிபான்கள் இவரது உயிருக்கு உலை வைக்க காத்திருக்கின்றனர். 



இவரை கொல்ல துடிக்கும் தீவிரவாதிகள் குறித்து மலாலாவிடம் கேட்டால் அவர் கூறும் பதில் தீவிரவாதிகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் உள்ளது: இப்பொழுதும் என்னால் அந்த சம்பவத்தை தெளிவாக நினைவுகூர முடிகிறது, அவர்கள் என்னை கொல்ல வந்தாலும், அவர்களிடம் நான்  "அவர்கள் செய்வது தவறு என்று சொல்லி, பெண்கள் கல்வி கற்பது எங்களின் அடிப்படை உரிமை என்று வலியுறுத்தவே விரும்புகிறேன்" என்கிறார் மலாலா யூசுஃப்சாய்.

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்